Sunday, February 8, 2009

வா.மு.சே.அவர்களின் திருக்குறள் செம்மொழி உரை

வா.மு.சே.அவர்களின் திருக்குறள் செம்மொழி உரை

மனித இனத்தை ஒன்றுபடுத்தும் ஆற்றல் மிக்க போற்றத்தக்க கோட்பாடு மானுடம் அல்லது மனிதநேயம் என்னும் வாழ்வியல் விழுமியமே ஆகும்.இதனைக் கோட்பாடு

அல்லது விழுமியம் என்னுமளவில் ஒதுக்கிவைத்துவிடாமல் நாம் அனைவரும் பின்பற்றத் தலைப்பட்டால் இவ்வுலகில் சமயம்,சாதி,இனம்,மொழி,தேசியம் முதலிய

மனிதனால் படைக்கப்பட்ட சுவர்கள் தகர்ந்து உலகம் ஒன்றுபட்டுவிடும்.

இத்தகைய சிறப்புமிக்க இந்நெறி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இரண்டாம் உலகப் போரின்பின்னரே தோன்றியது.தமிழ்நாட்டில் மட்டும் மூவாயிரம் ஆண்டுகள் முன்னர்,சங்க காலத்தில் அனைத்துப் பாவலர்களாலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் உலக ஒருமைப்பாட்டுக் குரல் கிரேக்கத்திலேயோ,உரோமப்பேரரசிலேயோ ஒலித்ததாகக் கூறவியலாது.

இத்தகைய உலகஒருமைப்பாட்டுணர்வுப் பின்புலத்தில் படைக்கப்பட்ட பெருமைக்குரிய

நூல் திருக்குறள் என்பதை மறந்துவிடக்கூடாது.மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்திட மனிதன்

உரைத்த நூல் திருக்குறள்.எலும்பைப் பெண்ணுருவாக்கியோ,முதலையுண்ட பாலனை உயிருடன் மீட்டோ திருவள்ளுவர் தமது பெருமையை உலகுக்குணர்த்த விரும்பினாரிலர்.

நம்முடைய மனச்சான்றைத் துலக்கித் தூய சிந்தனை வழங்கி,நமக்கு வாழ்க்கையைப்

பற்றிய தெளிவையும்,நாம் வாழும் சமுதாயத்தின் நலம் குறித்த ஈடுபாட்டையும் ஏற்படுத்தி,வாழ்வாங்கு வாழ வேண்டியதன் இன்றியமையாமை வலியுறுத்தினார் திருவள்ளுவர்.

தெய்வத்தைப் பற்றிய தேடலில் மூழ்கி,அண்டைவீட்டு மனிதனின் நலத்தில் கூட ஆர்வம் காட்டாது,தாமரை இலைத் தண்ணீர் போல,உலகத்தோடொட்டாது,

ஒதுங்கி வாழ்ந்து,தனக்கும் பயனின்றித் தன் சமகாலச் சமுதாயத்திற்கும் பயனின்றி

வாழும் மனிதனைக் கண்டு எள்ளி நகையாடினார் திருவள்ளுவர்.

அனைத்துயிரையும் ஒப்பநோக்கும் ஒப்புரவு எனும் உயர்நெறியை ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்தியமையை,எண்ணீப்பாராமல் நம் முன்னோர்கள்,கடந்த இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக,சாதி என்னும் அளவுகோலால்

மனிதனை அளந்து,பெரும்பகுதியினரை ஒதுக்கியும் ஒடுக்கியும் அடக்கி வதைத்துவந்தனர்.

இராமானுசர்,வள்ளலார் போன்ற புரட்சித்துறவிகள் இத்தகைய இழிதகைமை நீங்கப்

பாடுபட்டனரெனினும், தந்தை பெரியாரின் தளரா உழைப்பும்,மக்களாட்சியின் மலர்ச்சியுமே ஒடுக்கப்பட்டோரை மீட்கத்துணைநின்றன.

இன்றைய சூழலில் வள்ளுவத்தின் வழிகாட்டுதல் நமக்குப் பெரிதும் துணைநிற்கும்.

பொழிப்புரை கூறுதற்கும்,போற்றி பாடுதற்கும் குறளை நாடாமல்,நாள்தோறும் நம் அன்றாடவாழ்வியற்சிக்கல்களுக்குத் தீர்வுகாணத் திருக்குறளைத் துணைக்கொள்ளும்

வழக்கம் மலர்ந்தால் நமது சமூகநோய்கள் விரைந்தொழியும்;புதிய விடியல் புலரும்.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் திருக்குறளுக்குப் புதிய உரைகள் தேவைதானா என்னும் கேள்வி எழுகிறது.அவரவர் தமது கொள்கைப்பிடிவாதங்களையும், கோணற்சிந்தனைகளையும் குறளில் ஏற்றிக் கூறுவதைக் காண்கிறோம்.

வீடுபேறு பற்றிக் கூறாது விடுத்தமையின் குறள் தீய குறள் ஆயிற்று எனவும் இதனை நோன்புக் காலங்களில் படிக்கக்கூடாது என்னும் கருத்திலேயே கோதைநாச்சியார்

‘தீக்குறளைச் சென்றோதோம்’எனத் திருப்பாவையில் கூறிப்போந்தார் எனவும்

தமிழை ‘நீச்ச பாசை” என வெறுத்தொதுக்கிய ஓர் ஆச்சாரியார் நயவுரை நவின்றார்.

அவரது கூற்றுக்கு மிகப் பெரிய எதிர்ப்பும் கண்டனமும் அந்தவேளையில் (அறுபதுகளின் முற்பகுதி) தமிழ்கூறும் நல்லுலகில் எழுந்தமையால் பிறகு அவர் தமது கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.ஆனால் அதே கருத்தை அண்மையில் வெளிவந்த ஒரு திருக்குறள் உரை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது.குறளைப் பழிக்கும் அந்தக் குறளுரைக்குப் பாராட்டும் பரிசும் கிடைத்துள்ளன.காலத்தின் கொடுமை என்றுதான் இதனைக் கூறவேண்டும்.

சென்னையில் கல்லாமாந்தர் பேசும் வழுமொழியில் ஓர் உரையைப் புகழ்(?)பெற்ற

ஓர் எழுத்தாளர் எழுதியுள்ளார்.மற்றொரு புகழ்(!)பெற்ற பேராசிரியர் திருக்குறளைப்

பழிப்பதற்காகவே திருக்குறள் உரை வகுத்துள்ளார்.

பெரும்பாலோரின் உரைகள்,சிலைகளில் போடப்படும் பறவைகளின் எச்சம் போன்றே,

வள்ளுவத்தை மாசுபடுத்தி நிற்கின்றன.இச்சூழலில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுரமன் அவர்கள் குறளுக்கு உரை எழுதமுனைந்தமை தேவைதானா என்னும் கேள்வி எழலாம்.

வள்ளுவம் வையகமெங்கும் பரவவேண்டும் என்னும் நோக்கிலும் வாழ்க்கைக்கு

வள்ளுவத்தின் வழிகாட்டுதலை எடுத்துரைக்கும் நோக்கிலும் கா.சு.பிள்ளை,பாவேந்தர் பாரதிதாசன்,புலவர் குழந்தை,பேராசிரியர் இலக்குவனார்,மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் முதலான பல அறிஞர்கள் குறளுக்கு உரை வழங்கியுள்ளனர்.கா.சு.பிள்ளை அவர்களின் உரையை எளிமைப்படுத்தி மு.வ. எழுதிய தெளிவுரை மிகப் பெரிய அளவில் விற்பனையாகிவருகிறது.

இச்சான்றோர்களின் முயற்சி குறளைப் பரப்புதற்குப் பெருந்துணை பயக்கின்றன.

இவ்வகையில் குறள்நெறி பரப்பும் முனைப்புடனே பெருங்கவிக்கோ இவ்வுரையைக் கொணர்கிறார்.

ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்டுப் பொதுமக்களிடமிருந்து ஒதுங்கிப் புலத்துறையினருடன் தம்மை ஒருங்கிணைத்துக்கொள்வதில் பெருங்கவிக்கோ அவர்களுக்கு விருப்பமில்லை என்பதை இவ்வுரை தெளிவுறுத்துகிறது.

ஒவ்வொரு குறளுக்கும் எளிய தொடர்களால் சுருங்கச்சொல்லி விளங்கவிக்க முயல்கிறார்.

நெடிய வாதத்திற்கும் பல்வேறு கருத்துமோதல்களுக்கும் இலக்காகிய குறள்களுக்கு

மிக அருமையாக,அனைவரும் ஏற்கும்வண்ணம் உரைவகுக்கிறார்.

எடுத்துக்காட்டாகச் சில குறள்களையும் பெருங்கவிக்கோ வழங்கும் உரையினையும் காண்போம்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.(இல்வாழ்க்கை-42)

என்னும் குறளில் ‘இயல்புடைய மூவர்’ யார் என்பது குறித்துப் பல கருத்துகள் கூறப்பட்டன.இக்குறளுக்கு வா.மு.சே.உரைவகுக்கும் பாங்கினைக் காண்க:

தன்குடி,தன் நாடு,உலகு ஆகிய மூன்றற்கும் இயற்கையாக அமைந்த மாந்தநேயநற்கடமை வழி துணைபுரிவதே இல்லறம் ஆகும்.இல்லறத்தினர் இதனை இயல்பாக்கிக் கொள்ளவேண்டும்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்(கு)

ஐம்புலத்தா(று) ஓம்பல் தலை. (குறள்-43)

என்னும் குறளில் இடம்பெறும் ‘தென்புலத்தார்’ என்னும் சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் கூறப்பட்டுவந்தன.இச்சொல்லுக்குப் பரிமேலழகர் ‘பிதிரர்’என்று பொருள் கூறுவார்.

‘பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி’ என்னும் பரிமேலழகரின் விளக்கம் தமிழ்மரபுக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத ஒன்று.

தமிழ்மறுமலர்ச்சிக்கு உழைத்த சான்றோர்களும் பெரியார்வெழிநின்ற அறிஞர்களும் இவ்வுரையை ஏற்கமறுத்தது போன்றே பெருங்கவிக்கோவும் ஏற்கவில்லை. இக்குறளுக்குப் பெருங்கவிக்கோ கூறும் உரை:

தம்தம் தலைமுறைகள்,தெய்வ வழிபாட்டுக்குரியன,நாடிய விருந்து,உறவுகள்,தன் குடும்பநலன்,ஆகிய ஐந்துவகைக் கடமைகளையும் செய்து பாதுகாத்தல் இல்வாழ்க்கையின் நிலையான பொறுப்பாகும்.

இவ்வாறு பல்வேறு குறள்களுக்குப் பெருங்கவிக்கோ வகுத்துள்ள உரையை இந்நூலுள்

கண்டு கற்று மகிழக.

திருக்குறள்,உரைவகுப்பதற்கும் பொழிவுகள் நிகழ்த்துதற்கும் படைக்கப்பட்ட நூலன்று

என்பதையும் வாழ்வாங்கு வாழ்ந்திடத் துணைக் கொள்ளவேண்டிய வாழ்வியல் விளக்கநூல் என்பதனையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட நூலெனினும் இன்றைய சமூகநோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகத் திருக்குறள் திகழ்கிறது.

இதன் அருமையை உணர்ந்து குறளைத் துணைக்கொண்டு நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வைச் சிறப்புறவாழ்ந்து ஏனையோர்க்கும் வழிக

1 comment:

.kavi. said...

பெருங்கவிக்கோவின் பணிகளை உணர்ந்து மதிப்பவர் மிகச் சிலரே.

தங்கள் மதிப்புரைக்கு நன்றி

.கவி.